Featured Image
Featured Image
Featured Image
Sale!

ஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back)

ஒரு புள்ளியில் தொடங்கி, கீற்றாகி, வடிவங்களும் உருவங்களும் தோன்றி, வண்ணங்களும் இழைனயமும் கொண்டு கித்தான் என்னும் வெளியில் உருவாக்கப்படும் ஓவியங்கள் விந்தையானவை. ஓவியன் உருவாக்கிய பிரத்யேகமான மாய உலகிற்கு அவை நம்மை இட்டுசென்றுவிடுகின்றன.

சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன, ஓவியங்கள் நிறைந்த கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்ஸ், அனிமேஷன் என்று தொடங்கிய அனுபவங்கள், ஓவியம் தீட்டும் தீராத ஆர்வத்தில் கொண்டுசென்றது, என் ஓவியப் பயிற்சிகளும் முயற்சிகளும் பள்ளிக் காலத்திலிருந்தே தொடங்கியது.

உருவப்படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, பிலிப் புக் அனிமேஷன் எனப் பல வடிவங்களும் அதற்கான அடிப்படை பயிற்சிகளான உடற்கூறியல், உளக்காட்சி என்றெல்லாம் பயணித்து ஓரிரு தசமங்களுக்கு பின்னர் நான் கண்டது மெய்சாரா அரூப ஓவியங்களை. பல கருக்கள், பல ஊடகங்கள், பல செயல்முறைகள் என்று எண்ணிலடங்காத வகைமைகளைக் கொண்டது ஓவியப் பயணம் என்பதை உணர முடிந்தது.

பொதுவாகவே ஓவியம் என்பது ஒரு கருத்தினை வெளிப்படுத்த உதவும் சாதனமாகவும், அழகியல் சார்ந்த கலை மற்றும் அலங்காரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. ஓவியத்திற்கு இவற்றைத் தாண்டிய ஒரு சாத்தியமிருப்பதைப் பல ஆண்டுகள் பயணித்த பிறகே உணரமுடிந்தது.

நாம் காண்கின்ற காட்சிகளின் அடிப்படையில் படைக்கப்படும் மெய்சார்ந்த ஓவியங்கள், கற்பனையில் உருவாக்கப்படும் ஓவியங்கள், உணர்வுகளின் அடிப்படையில் தீட்டப்படும் ஓவியங்கள் போன்றவை நாம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. அதனைத் தாண்டிய மெய்சாரா அரூப ஓவியங்களில் இருக்கும் இலக்கணம் மற்றும் அணுகுமுறைகளை நாம் அறிந்துகொண்டால் அவற்றையும் முழுமையாக நம்மால் கண்டுகளிக்க முடியும். அந்தப் படைப்புகளிலுள்ள ஓவியர்களின் தேடல்களில் நம்முடைய தேடல்களையும் உணரமுடியும்.

ஓவியம் சார்ந்த குறிப்பிட்ட தேடலில் நான் பயணித்த பொழுது அனைத்துக் கலைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு தொடர்சங்கிலி உள்ளதென்பதை அறிந்துகொண்டேன். இங்குள்ள கருத்துக்கள் ஓவியத்திற்கு எவ்வாறு பொருந்துமோ அதுபோலவே புகைப்படக்கலை, இலக்கியம், நடனம், இசை, சினிமா என்று படைப்புசார்ந்த எந்தச் செயலுக்கும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

ஓவியம் பற்றிய புரிதலைத் தேடிய பயணத்தில் நான் அறிந்து கொண்டவற்றில் என்னைக் கவர்ந்த எண்ணங்களையும், சில அசாதாரண கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். ஓவிய இலக்கணம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் போன்ற அடித்தளமான கருத்துக்கள் நடைமுறையில் மிக நேரடியாக எவ்வாறு ஓவியர்களால் அணுகப் படுகின்றது என்பதை ஓர் ஓவியனின் பயணம் மற்றும் ஒரு பார்வையாளனின் பயணம் என்னும் இரண்டு கோணங்களில் உதித்த சிந்தனைகளாகவே இந்த நூலைத் தொகுத்துள்ளேன்.

கணபதி சுப்பிரமணியம்

for phone booking – (முன்பதிவு சலுகை)-9042461472

ஓவியமும் கூழாங்கற்களும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back)”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Editorial Review

பரிந்துரைகள்

ஓவிய பிரியர்களுக்கு இந்த நூல் ஒரு மெய்ப்பிக்கப்பட்ட கனவினைப் போன்றது, இது அதீத இனிப்புச் சுவை கொண்ட டர்கிஷ் டிலைட்டினை எனக்கு நினைவுபடுத்துகிறது. மந்திர வார்த்தைகளைக் கொண்டு .ஓவியம் பற்றி எழுதுவதில் வல்லவர் கணபதி. அவருடைய கட்டுரைகளை விரும்பி வாசிக்கும் வாசகன் நான். இந்த புத்தகம் ஓவிய உலகிற்கு மகிழ்ச்சியையும் முழுமையினையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

சையத் தாஜுதீன்

மலேசியாவின் மூத்த முன்னணி ஓவியர்

 

 

ஓவியம் மற்றும் ஓவிய செயல்முறைகளையும் அணுகுமுறைகளையும் பற்றிய கணபதியின் சிந்தனைகளில், கிழக்கு மற்றும் மேற்கின் பலவகையான கோட்பாடுகளின் அழ்ந்த புரிதல்கள் என்னை ஈர்க்கின்றன. ஓவியம் படைத்தல் மற்றும் ஓவிய கருத்துருவங்களை மிக எளிய முறையில் இந்த நூலில் பல கட்டுரைகளின் மூலமாக அவர் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

  1. V. இளங்கோ

மூத்த ஓவியர், சிற்பி, ஓவிய ஆசிரியர்

Space, Line and Form எனும் ஓவிய நூலின் ஆசிரியர்

 

 

மிக எளிமையான தமிழில் கணபதி சுப்பிரமணியத்தின் ஓவியம் குறித்த கட்டுரைகள் ஒரு புத்தகமாக தொகுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஓவிய இயக்கங்களைப்பற்றியும் பாணிகளைப்பற்றியும் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் மிக நுணுக்கமானவை. குறிப்பாக அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள முடியாத அரூப ஓவியங்கள் மிக அழகாக விவரிக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியது. பல ஓவியர்களின் பாணிகளைப்பற்றி விளக்கபட்டிருப்பது படிப்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. இந்த புத்தகம் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டும். வாழ்த்துகள்.

கேஷவ் வெங்கடராகவன்

மூத்த ஓவியர், பிரபல பொலிடிகல் கார்டூனிஸ்ட்

 

இன்றளவும் நம்மிடையே நவீன ஓவிய சிந்தனை அன்னியப்பட்டே இயங்குகிறது. அதுபற்றி ஒரு முறுக்கிக் கொண்ட மொழியில் எழுதினால் படிப்பவருக்கு அது ஓவியத்தைக் காட்டிலும் சிக்கலானதாக ஆகிவிடுகிறது. திரு கணபதி சுப்ரமணியம் தமது கட்டுரைகளில் இந்தக் குறையைக் களைந்து விட்டார். எளிய சொற்களைக் கொண்ட வாக்கியங்களால் மிக ஆழமான சிந்தனை கூடியவிதமாக நவீன ஓவியம் பற்றி அவர் எழுதுவது ஒரு புதிய அனுபவத்தை  நமக்குக் கொடுக்கிறது. பொருத்தமான புதிய கலைச் சொற்களை கொண்ட இவரது எழுத்து ஓவியத்தை ஒரு புதிய முறையில் அறிமுகப் படுத்துகிறது. புதிராகவே உணரப்படும் நவீன ஓவிய சிந்தனை மாளிகைக்கு அது ஒரு புதிய நுழைவாயிலாக உள்ளது.

நாகராஜன் அரவக்கோன்

மூத்த ஓவியர், பல ஓவிய நூல்களின் ஆசிரியர்

 

 

ஓவியம் படைப்பதை விட கடினம் ஓவியம் குறித்து எழுதுவதும் பேசுவதும், குறிப்பாக தமிழில். கணபதி சுப்பிரமணியம் வெகு சரளமான முறையில் ஓவியக்கலையின் சாரத்தை தகுந்த உதாரணங்களோடும், பொருத்தமான ஓவியங்களோடும் வெளிப் படுத்துவது பெரும் ஆனந்தத்தை தருகிறது. சிக்கலான மொழிநடை இல்லை; பயமுறுத்தும் சொற்பிரயோகங்கள் இல்லை. நவீன ஓவியங்கள் குறித்து பீடத்தின் மீதமர்ந்து பீதியூட்டவும் இல்லை. சுவாரசியம் மிகுந்த எழுத்து, நம் விரல் பிடித்து அடர்ந்து கிடக்கும் ஓவியக்காட்டினுள் அழைத்து செல்கிறது

ஜீவா நந்தன்

மூத்த ஓவியர், ஓவிய ஆசிரியர்,

திரை விமர்சகர், தேசிய விருதுபெற்ற எழுத்தாளர்

 

 

இந்த பிரபஞ்சம் உருவான காலத்திலிருந்து சமூகத்தின் முன்னோடியாக விளங்குவது கலை. அன்பும் மனிதநேயமும் கலந்த கலைகள் மட்டுமே இந்த உலகை தடையின்றி ஆள்கின்றன. ஒரு கலைஞன் என்பவன் படைப்பிற்கும் பார்வையாளனுக்கும் இடையே செயல்படும் ஒரு கருவி. இந்த நூல் கலையையும் வாழ்வியலையும் ஆராய்கின்றது.

பாலசுப்ரமணியன் குப்புசுவாமி

மூத்த ஓவியர்

 

கணபதியின் இந்த கட்டுரைகள் அவரைப் போலவே மிக தெளிவாகவும் தீர்க்கமாகவும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் அமைந்திருப்பது மிக மகிழ்ச்சி. கலை மற்றும் கலை அணுகுமுறை பற்றிய மிக தெளிவான புரிதலுடன் எளிமையாய் தமிழில் தந்திருப்பது மிக ஆச்சரியங்களில் ஒன்று. என்னை பொருத்தவரை தமிழில் இதுபோன்ற எளிய ஓவியத்திற்கான புரிதலுடன்கூடிய புத்தகம் இருந்ததில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு கட்டுரையிலும் அவரின்  ஓவியத்திற்கான புரிதலும் அவரின் ஈடுபாடும் ஒவ்வொரு வரிகளிலும் நம்மால் உணர முடியும்.

மார்க் ரத்தினராஜ்

சமகாலத்து முன்னிலை ஓவியர்

 

 

இந்திரன், தேனுகாவிற்கு அடுத்தபடியாக ஓவியங்கள் சார்ந்த எழுத்தில் கணபதி சுப்பிரமணியம் ஒரு கலைப்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அழகுத் தமிழில் நேர்த்தியாக தான் சொல்ல வந்த செய்தியை மிகக் கச்சிதமாக கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் புரியும்படி எழுதியிருப்பதே இவர் எழுத்தின் சிறப்பு.

செல்வன் நடேசன்

மூத்த ஓவியர், ஓவிய ஆசிரியர், புகைப்பட கலைஞர்

 

 

ஓவியத்துறையில் உள்ள நுட்பமான செய்திகளை எளிதில் புரியும் வண்ணம் தம்பி கணபதி எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் ஓவியக்கலை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமன்றி அதிக ஆர்வமுள்ள எல்லோரும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. நான் ஓவிய கலைச்சொல் விளக்கம் என்னும் ஒரு நூல் எழுதிக்கொண்டு வருகிறேன். தமிழில் எழுதுவதில் உள்ள சிரமங்கள் எனக்கு நன்றாக தெரியும். சிலநேரம் கணபதியின் எழுத்துகளை படிக்கும் போது அந்த ஓவியத்தோடு நாமும் கலந்து விடுகிறோம். எளிதில் புரியாத பல நுட்பங்களை தன் எழுத்தாற்றல் கொண்டு மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார் அவரது பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

டாக்டர் ஆர் திருநாவுக்கரசு

ஓய்வுபெற்ற மருத்துவக் கல்லூரி பிரின்ஸ்பல்

தமிழக லலித் கலா அகாதமியின் அங்கீகாரம் பெற்ற ஓவியர்

நுண்கலை இதழில் ஓவிய வரலாறு பற்றி பல கட்டுரைகள் வரைந்தவர்

 

நண்பர் கணபதி சுப்பிரமணியம் ஒர் ஓவியர் என்பதால் அடிக்கடி ஓவிய நிகழ்வுகளில் சந்தித்துக்கொள்வோம்.! அதற்கு முன் அவருடைய ஒவியம் சார்ந்த விமர்சனங்களை படிக்கும் போது ஆச்சரியப்படுவேன். காரணம்? அதில் உள்ள நேர்மை தான்! எந்த விமர்சனத்திலும் படைப்பாளிகளைத் முன்னிலைப்படுத்தாமல் படைப்பை முன்னிருத்தி விமர்சிப்பதுதான் அவரது தனிச் சிறப்பு! நண்பரே! உங்களின் ஆத்மார்தமான தேடல்களுக்கு காலம் என்றும் நண்பனாக உடன் பயணித்து உதவட்டும் ! வாழ்த்துக்கள்!

பொண்வண்ணன்

நடிகர், இயக்குனர், ஓவியர்

 

 

ஓவியம் பற்றிய இந்த கட்டுரைகள் ஒரு புதிய உலகினை எனக்கு திறந்து வைக்கின்றது. கணபதியினுடைய எழுத்துக்கள் ஓவியங்களை பற்றிய ஆழ்ந்த புரிதல்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், என்னுடைய உணர்வுகளுடன் என்னை தொடர்புகொள்ளசெய்து புதிய படைப்புகளை உருவாக்க உந்துகின்றது.

  1. J. ராஜ்குமார்

மூத்த ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு சார்ந்த பல நூல்களின் ஆசிரியர்

 

 

கணபதியென்றதும் ஞாபத்திற்கு வருவது மிகப்பொறுமையாய் அவர் தீட்டிய ஓவியங்கள்தான். ஆனால் கலை பற்றிய எழுத்துகளை எழுதத் தொடங்குகையில் ஒரு தேர்ந்த எழுத்தாளன் எழுதியது போலிருந்தது. அந்த வியப்பிலிருந்து என்னால் இன்னும் வெளி வர முடியவில்லை. ஓவியத்தைப் பற்றி ஓவியனுக்கு எழுத வருமா என்கிற சிந்தனையை தான் எழுதிக் காட்டியதின் வழியே நொறுக்கிவிட்டாரென்றே சொல்ல வேண்டும். தமிழ்மொழியில் அத்தனை தெளிவு அத்தனை நுணுக்கம். கணபதியை ஓவிய எழுத்தாளன் என்றே அழைக்க ஆசைப்படுகிறேன்.

அய்யப்ப மாதவன்

மூத்த கவிஞர், பாடலாசிரியர், புகைப்படக்கலைஞர்

 

 

சீன மற்றும் ஜப்பானிய கலைஞர்களின் தியான கலை வெளிப்பாட்டையும் மேற்கத்திய ஓவியனின் உள்ளத்தின் அடி ஆழத்தில் எழும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டினையும் அழகாக நமக்கு பரிச்சயபடுத்துகிறார். தொடுதல் உணர்தல் படைக்கும் பொழுது ஏற்படும் ஆனந்தத்தையும் தனது எளிமையான எழுத்தில் நமக்கு புரிய வைத்துவிடுகிறார். கணபதி சுப்பிரமணியம் ஒரு ஓவியராக இருப்பதால் அவரது அனுபவத்தின் வாயிலாகவே  கலையின் ரகசியங்களை திறந்து வைத்து விடுகிறார்.

ரஃபிக் அஹமத்

மூத்த கொலாஜ் ஓவியர், அமெரிக்க ஜாக்ஸன் பாலக் விருது பெற்றவர்

 

 

ரூப-அரூப நிலைகளுக்கிடையில் சமன்பாட்டைத் தேடும் ஓவியன். புள்ளி-கோடு-வர்ணம் மட்டும் அல்ல அவரது மனம். ஞானத்தை அள்ளும் வேட்கை அங்கு மையமிட்டிருக்கிறது. மொத்தத்தில் காலத்திடம் அன்புடன் சமர் புரியும் காலாதீதத்தின் சிஷ்யன் திரு.கணபதி சுப்ரமணியன் அவர்கள். அவரின் சக்தியும் இயக்கமும் நோக்கரிய நோக்காக இந்த ஓவியக் கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கிறது. அவைகளும் அவரும் அங்கு வேறு வேறல்ல.

பாலசுப்ரமணி சடையப்பன்

நிறுவனர், பாலுமகேந்திரா ஃபிலிம் சொசைட்டி